03 May 2012

தவறா மன்னிப்பா

பெருந்தவறுகளின் வலியில்
உழலாதவரை
மன்னிக்க தெரிவதில்லை...
மன்னிக்க பழகியபின்
இங்கு எதுவுமே
பெருந்தவறில்லை...

27 February 2012

குடுவையும் நீரும்

தயங்காமல்
"நீங்க தமிழா ?" என்று
கேட்க முடியாததை விட
மோசமான ஒரு கணத்தை
நான் கடந்ததில்லை !
இனியும் அந்த கணத்தை
சந்திக்க விரும்பவில்லை !!

நீராய் மொழி..

குடுவையாய் மக்கள் ..
குடுவையின் நிறமாய் தேசம் ..
நிறம் கண்டு குடுவையை
நொறுக்கி விட்டு
நீரை தொலைத்து நிற்கிறோம் !

ஆவியான நீர்

மழையாய் பொழியட்டும்..
குடுவையின்  நிறமிங்கு
அழிந்து போகட்டும் ..
குடுவையும் நீரும்
மட்டும் மிஞ்சட்டும்..


18 January 2012

உணவு

கடல் கடந்து வந்தபின்
வீட்டிலிருந்து வந்த
உணவு பொருளில்
கண்டெடுத்த முடி
ஏற்படுத்தும் உணர்வு
கண்டிப்பாய் கோபமில்லை ...

30 December 2011

என் முதல் வாழ்த்துக்கள் , எனக்கானது..

கொஞ்சம் சொந்தத்திற்கு
கொஞ்சம் காதலுக்கு
கொஞ்சம் நட்பிற்கு
கொஞ்சம் கடமைக்கு
கொஞ்சம் இணையத்திற்கு
கொஞ்சம் சிரிப்பிற்கு  
கொஞ்சம் கண்ணீருக்கு   
கொஞ்சம் வலிக்கு
கொஞ்சம் நோய்க்கு
பிரித்து கொடுத்தபின் எனக்கு
எதுவும் மிஞ்சவில்லை , கடந்த ஆண்டு..
அதற்காகவேனும் புது வருடத்தின்
என் முதல் வாழ்த்துக்கள் , எனக்கானது..

தொலைதலிலும் தொலைப்பதிலும்

சிறு பிராயத்தில் தொலைந்து விடுமோ என்ற பயம்...
இளமையில் தொலைக்க மாட்டோமோ என்ற மயக்கம்...
பின்னர் தொலைத்து விடுவோமோ என்ற கவலை...
தொடர்கிறது தொலைந்து விட்டோமோ என்ற சந்தேகம்...
இறுதியில் தொலைய மாட்டோமா என்ற காத்திருப்பு...
தொலைதலிலும் தொலைப்பதிலும்
நிறைந்திருக்கிறது வாழ்க்கை...

01 September 2011

செல்லம்மாவும் காதலும்

செல்லம்மா காத்திருந்த காதலும் 
செல்லம்மாவிற்கு காத்திருந்த காதலும்
ஒன்றுதான்
பாரதிக்கு சொல்ல தெரியவில்லை
பாரதி சொல்லாமல் புரியவில்லை

மானா புலியா

சலனமின்றி நகர்கின்றன
என் நிமிடங்கள்..
புலிக்கு பயந்த மானா..
மான் மேல் பாய
காத்திருக்கும் புலியா ..

உருவ வழிபாடு

பூந்தொட்டிகளுக்கு
நடுவே "பார்பி டால்".
முன்னே கண் மூடி
அமர்ந்திருக்கிறது ஒரு குழந்தை.
உண்மையான உருவ வழிபாடு.

26 January 2011

வரம்


வரத்தை விரட்டி
சாபம் வாங்கி நிற்கிறேன்..
செய்த தவமும்
செய்யும் தவமும்
செல்லாதவை..

21 January 2011

உன்னோடதானதொரு தனிமை


 மைதியான நள்ளிரிவில்
 எங்கேயோ வீறிட்டு அழும் 
கைக்குழந்தையின் சத்தமும் 
என் படுக்கையின் 
காலியிடமும் 
அதிகமாய் நினைவுபடுத்துகிறது 
உன்னையும் 
பின்னர் 
உன்னோடு 
இருந்த என்னையும்...

19 January 2011

தூக்கம் !!!

எட்டு வயது வரை
தூக்கம் புரியாத ஒரு செயல்

வந்த சில நாட்களில்
மருத்துவமனையில்
தூக்கம் வாங்கிய ஒரு பொருள்

சில பள்ளி  வருடங்களில்
சந்தேகமே  இன்றி
தூக்கம் ஒரு சுகம்

கல்லூரியின் விடுதியில்
முதல் முறை உரைத்தது
தூக்கத்தின் முதல் பிரிவு

பின் வந்த வேலை காலங்களில்
எல்லாம் தொலைந்தே போனது
தூக்கம் ஒரு கனவு

Lucid Dreaming
கற்கும் நாட்களில்
தூக்கம் ஒரு கடமை

வரும் நாட்களை பற்றி
யோசிக்கையில்
தூக்கம் ஒரு பயம்

இருந்தாலும் எப்போதாவது
மட்டும் அமைந்து விடுகிறது
கலப்படமற்றதொரு தூக்கம்
இன்று போல் !

நன்றி Skype !


17 January 2011

சில காரணங்கள் !!!

பெங்களூருவின் வழக்கமான
போக்குவரத்து நெரிசல்..
என் பேருந்தின்
அருகே நிற்கிறது
ஒரு பள்ளி பேருந்து ..
ஒரு ஜன்னலின் ஓரமாய்
அமைதியாய் தனியாய்
அழுது கொண்டிருக்கும் சிறு பெண்..
என்னவாய் இருக்கும் காரணம்..
நான் அவ்வயதில் எதற்கு
இப்படி அமைதியாய் அழுதேன் ..
சில காரணங்களை
சொல்ல தெரிவதில்லை..
சொல்லி புரிவதில்லை ..
அவளுடைய காரணமாவது
சாதரணமானதாக இருக்கட்டும்..
சாதரணமானதாகவே இருந்துவிடினும்
சகுனம் சரியாக இல்லை
இந்த மொத்த சமூகத்துக்கும்...


12 January 2011

நீர் !

துணி துவைத்து
ஓய்ந்து அமர்கையில்
நான் இருக்கும் பயமின்றி
துணி அலசிய  நீரை
குடிக்கிறது ஒரு காகம்
எப்பிறவியில் எந்த மகனோ வைக்காத நீர் !
இப்பிறவியில் எந்த மனிதனும் வைக்காத நீர் !

22 December 2010

பேரொளியும் பேரமைதியும்

தூரத்தில்  பிரகாசிக்கிறது ஒரு பேரொளி
வழியெங்கும் நிறைந்திருக்கும் ஒரு பேரமைதி
இவை ரெண்டும்
என்னை விழுங்காமல் இருக்க
கையோடு சுமந்து திரிகிறேன்
"Angry bird" உம் "White Noise" உம்.

01 May 2010

பேருந்து பயணம்

பேருந்து பயணத்தில் 
அருகில் அமர்ந்திருக்கும் 
பெண்ணின் மடியில் 
குழந்தையாய் நீ..
என் நிறுத்தத்தில் 
பறித்து கொண்டு இறங்கிவிடலாமா
என்று பைத்தியகாரதனமாய் 
யோசிக்கிறது இந்த மனசு ..

18 January 2010

தோல்வி ..

தெருவோரத்தில்
பொம்மையை
கட்டிபிடித்துகொண்டு
தூங்கும் பைத்தியக்காரிக்கு
தெரியாது
நான் அவளிடம்
தோற்று விட்டேன் என்று..

29 December 2009

அழகாய் இருக்கிறது ..

தேநீர் கோப்பைக்கு
வண்ணம் தீட்டி கொண்டே கேட்கிறாய்
வண்ண கலவை
சரியாய் இருக்கிறதா என்று ..
தீர்க்கமாய் இருக்கும்
உன் விழிகளை
மட்டும் பார்த்து சொல்கிறேன்
"அழகாய் இருக்கிறது " என்று ....

17 December 2009

யார் கணக்கு தவறு ?!?

கார்த்திகை மாதம்
தேவர்களின் இரவு
மாலையில் விளக்கேற்றினாள்  அம்மா...
மார்கழி மாதம
தேவர்களின் அதிகாலை
காலையில் விளக்கேற்றினாள்  அம்மா...
எப்படி ஒரே நாளில்
என் இரவு விடியலாகிறது... தேவருடயதும் ..
யார் கணக்கு தவறு ?!?

14 December 2009

எங்கே என்னுடையது

என்னை கடக்கும்
எல்லா குழந்தை தள்ளுவண்டியிலும்
தேடி கொண்டிருக்கிறேன்
என்னுடையதை..

சண்டை

கறிக்கடை கூண்டு..
கோழிகளுக்குள் சண்டை ..
முதல் சாவு யாருடையது?

நீயா நானா ?!?

உனக்கு என் மௌனம்
புரியவில்லை என்று ..
வார்த்தைகள் சேகரித்து
ஒத்திகை பார்த்து
ஒரு காலை தேநீரில்
ஒப்பித்தேன் அனைத்தையும்

பதில் எதிர்பார்த்து
உன் முகம் பார்கையில்
செய்திதாளில் இருந்து
முகம் திருப்பாமல் கேட்கிறாய்
"தெலுங்கானா பிரச்சனை எப்பொழுது தீரும் ?"
உனக்கு புரியவில்லையா ??


இல்லை எனக்கு புரிய வைக்க தெரியவில்லையா ??

12 March 2008

வெற்றியும் தோல்வியும்

நான் கடந்து
வந்த தோல்விகளில்
மெல்லிய வெற்றி நீ!!
நான் கடந்து
வந்த வெற்றிகளில்
மோசமான தோல்வி நீ !!

02 March 2008

நீ யற்ற நொடிகள் !

நீயற்ற நொடிகளை
எண்ணி கொண்டே
கரைந்து கொண்டிருக்கிறது
என் யுகங்கள் !
காத்து கொண்டிருக்கிறேன்
நீ வந்ததும் மீட்டுக்கொள்ள ...